கீர்த்தனைகள்
---------------------------
விநாயகர் ஸ்துதி
ராகம் அமிர்தவல்லி தாளம் ஆதி
பல்லவி பாமாலை பொலிந்து நான் பாடவருள் -கணேசா
ராமலிங்க பர்வதவர்த்தனி பதம் துதித்து
அனுபல்லவி
பூமாலைப் பொழில் சூழும் பூங்குடிப்பதியிலே
பாணாவிடைத்தலத்தில் கோவில் கொண்ட பெருமானை
சரணம்
தந்தையும் சிவனே தாயவளும் உமையே
முந்தி நீ வலம்வரத் தந்தான் மாங்கனியே
சிந்தை குவிந்து அந்தச் சிவபெருமானைப் பாட
தந்தி முகத்தவனே தந்தருள் தாரும் ஐயா
நீலத்திரைக்கடல் சூழும் பூங்குடிப் பதிதனில்
கோலப்பாணவிடைக்கோவில் கொண்ட சிவனைச்
சீலப்பர்வதராஜன் செல்வி உமையைப் பாடிச்
சாலத்தொழு அருள்வாய் சித்திவிநாயகனே
கனிவுடன் ராமலிங்கம் கல்யாணம் செய்தானடி
ராகம் கல்யாணவசந்தம் தாளம் ஆதி
பல்லவி
வனிதையாம் பர்வதவர்தனியைகண்டு
கனிவுடன் ராமலிங்கம் கல்யாணம் செய்தானடி
அனுபல்லவி
கனிகள் குலுங்கும் சோலைக்கவன் பாணாவிடைதனில்
இனிய பொற்கல்யாண வசந்த மண்டபத்தில்
சரணம்
வேதியர் வேதமோதி விளங்கு மந்திரமொலி க்க
நாதஸ்வர கானம் நாற்றிசையும் முழுங்க
மாதவள் பர்வதவர்தனியும் நாணக்
காதலாய் ராமலிங்கம் கனக நான் சூட்டினானே
பரந்தாமன் தங்கை பர்வதவர்தனியின்
கரத்தாமரை ஏந்தி அரண் கரத்தில் தந்தாள்
புறப் பானாவிடையிலே பூமாலை பொழிந்தது
அரன் ராமலிங்கேஸ்வரன் அகமிக மகிழ்ந்தனன்
-------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------
மார்க்கண்டனுக்காக மறலியை உதைத்தவன்
ராகம் கரஹரப்பிரியா தாளம் ஆதி
பல்லவி
ராமலிங்கேஸ்வரனே அபயம் - சிவ
பூமியாம் பூங்குடியின் பாணா விடைப்பரனே
அனுபல்லவி
பூமலர்ப்பாதம் நாடி பாணவிடைத் தலத்தில்
கோபுரவாசல் வந்தேன் கிருபையை வேண்டி நின்றேன்
சரணம்
மார்க்கண்டனுக்காக மறலியையே உதைத்தாய்
ஆர்க்கும் சிலம்பொலிக்க அம்பலத்தில் ஆடி நின்றாய்
பார்த்திடுவாய் சிவனே பர்வதவர்த்தனிப்பதியே
மார்க்கமொன்றுமறியேன் மலரடி நான் பிடித்ததேன்
சரணடைந்திடுவோரின் சஞ்சலம் தீர்த்து வைப்பாய்
கிராமத்தில் சூலமேந்தும் கபாலீச்சரனே அருள்
பரமேஸ்வரனே கௌரி பர்வதவர்த்தனி மணாளா
புரப்பூங்குடில் பாணாவிடைக்கோவில் கொண்ட தேவா
---------------------------------------------------------------------------------------
கருணையே உருவான தாயே
ராகம் சிந்துபைரவி தாளம் ஆதி
கருணையே உருவானா தாயே -தேவி
அருளை அள்ளியே தரும் அன்னை பர்வதவர்த்தனி
அனுபல்லவி
திருவிளங்கும் பூங்குடித் திகழு ம்பாணாவிடை
பெருமான் ராம்லிங்கன் பிரியமனோஹரி
சரணம்
அன்னையும் நீ அல்லவோ அண்டசராசரம்
தன்னையே தாங்கியே தன்னருள் புரிபவளே
வண்ணக்கடலலைகள் வந்து வந்து பாடும்
நன்னகர்ப் பூங்குடிப் பர்வதவர்த்தனியே
அன்புருவானவளே ஆதிபராசக்தி
இன்பமே எமக்கு என்று இறைஞ்சிடும் தாயவளே
துன்புறுவார் துயர் துடைத்திடும் ஆதி சக்தி
தூய பாணாவிடைத் திருக்கோயில் கொண்ட தேவி
----------------------------------------------------------------------------------------------
எல்லாம் அறிந்தவனே
ராகம் மலையமாருதம் தாளம் ஆதி
பல்லவி
எல்லாம் அறிந்தவனே -சிவனே
என்னுள்ளம் அறியாயோ ராமலிங்கேஸ்வரா
அனுபல்லவி
நல்லாசி தந்து நின்றாய்
நாவாரப்பாடு என்றாய்
வல்லானே வண்டமிழில்
வாழ்த்தியுனை பாடினேன்
சரணம்
அஞ்சல் என்றருளாயோ அபாயமும் தாராயோ
கஞ்சமலரின் கண்ணால் காசினியில் எனைப்பாராயோ
வஞ்சகர் செயல் கண்டும் வாரா திருப்பாயோ
தஞ்சமென்றுனையடைந்தேன் தரணியில் எனைக்காப்பாய்
ஆலகாலம் அருந்தி அருள் புரிந்தாய் தேவர்க்கே
காலகாலன் ஆனாய் காக்கச் சிறுவேதியன்
பாலன் உனைச் சரணடைந்தேன் பாலித்தருள் ராமலிங்கா
நீலக்கடல் சூழ் பூங்குடிப் பாணா விடைத்தல தேவா
---------------------------------------------------------------------------------
மங்களம்
ராகம் சுருட்டி தாளம் ஆதி
பல்லவி
ராமலிங்கேசனுக்கு ஜெயமங்கலம்
பர்வதவர்த்தனிக்கு சுபமங்களம்
அனுபல்லவி
பூமலர்ப்பாணா விடைதலத்தி ற்கும் மங்களம்
பூங்குடிக்கும் மங்களம் பூசுரர்க்கும் மங்களம்
சரணம்
கணபதி கந்தன் விஷ்ணு காளி லஷ்மி ஸரஸ்வதிக்கும்
குணபதி பைரவருக்கும் கோவில் பக்தர் யாவருக்கும்
மணமலர்தூவி பக்தி மல்கும் தொண்டர் அனை ருக்கும்
இணையடி தொழும் அன்பர் யாவருக்கும் மங்களம்
இன்பமே எங்கும் சூழ்க எல்லோரும் நன்றாய் வாழ
துன்பங்கள் எம்மை விட்டு துரிதமாய் நீங்கி ஓட
அன்பரின் அகம் மகிழ ஆனந்த வாழ்வு வாழ
நன் பூங்கொடி ராமலிங்க நாதனுக்கு மங்களம்
சுபம்
No comments:
Post a Comment